2026 FIFA உலகக்கிண்ணத்தின் முதல் நாள் போட்டிகளில் மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்து உலகக்கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளன.
2026 FIFA உலகக்கிண்ணத்தின் முதலாவது போட்டியாக மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் இன்று (12.06) அதிகாலை 12.30 இற்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜூலியன் குயினோன்ஸ் 9 ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்காக போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்ததுடன், ரவுல் ஜிமனெஸ் இரண்டாவது கோலை அடித்து மெக்சிகோவின் வெற்றியை உறுதிப்படுத்தினார். போட்டியின் இரண்டாம் பாதியில் தென்னாபிரிக்க வீரர் ஸ்பெபெலோ சித்தோல் 49 ஆவது நிமிடத்திலும் மற்றும் தெம்பா ஸ்வானே 84 ஆவது நிமிடத்திலும் ஆகியோர் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் அந்த அணி ஒன்பது வீரர்களுடன் போட்டியை நிறைவு செய்துகொண்டது. 90 ஆவது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் செசார் மொன்டெஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.
இன்று காலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் கொரியா மற்றும் செக்கியா அணிகள் மோதின. இந்த போட்டியில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. லடிஸ்லவ் கிரெய்சி 59 ஆவது நிமிடத்தில் அடித்த கோலால் செக்கியா அணி முன்னிலை பெற்ற போதிலும், இன்-ப்வாம் ஹ்வாங் 67 ஆவது நிமிடத்தில் சமநிலை கோலை அடித்தார். பின்னர் அவர் வழங்கிய பாஸை ஓ ஹ்யோன்-க்யூ 80 ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றி தென் கொரியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இந்த முடிவுகளின் அடிப்படையில் குழு A இல் மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் தலா மூன்று புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன.
