கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை விகாரை வீதியானது கடந்த டிசம்பர் மாதம் (2025) புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பில் மக்கள் மத்தியில் திருப்தியின்மை காணப்பட்டமையால், குறித்த வீதி தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டன.
குறித்த வீதியானது சக்திபுரம், வித்தகிபுரம், அய்யாச்சாமி ஹில்ஸ், ஜெயராஜ் மாவத்தை, கிறிஸ்லஸ் பார்ம், ட்ரய்ட்டேன் தோட்டம் போன்ற கிராமங்கள் மற்றும் பகுதிகளில் வாழும் மக்களின் பிரதான போக்குவரத்துப் பாதையாக விளங்குகிறது.
இந்நிலையில், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், குறித்த வீதி அபிவிருத்திப் பணியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மேற்குறிப்பிட்ட வீதியின் நீளம் மற்றும் அகலம் தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக குறித்த வீதி தொடர்பான ஆவணங்கள் கொட்டகலை பிரதேச சபையிடம் கோரப்பட்டன.
குறித்த வீதி புனரமைப்புக்காக 2025ஆம் ஆண்டுக்கான மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, தலவாக்கலை பிரதேச கிராம சங்கவர்தன பலமண்டல சமிதிய (Talawakakle Grama Sanwardana Balamandala Samithiya) என்னும் அமைப்பின் ஊடாக புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வீதிக்கான அளவுப் பட்டியலில் (BOQ – Bill of Quantities), வீதியின் நீளம் 33 மீட்டர் எனவும், அகலம் கூடியது 5.27 மீட்டர் எனவும், குறைந்தது 4.57 மீட்டர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வீதியை அளவீடு செய்தபோது, அமைக்கப்பட்ட வீதியின் அளவுகள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தமை தெரியவந்தது.
மேலும், இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டு, கொட்டகலை பிரதேச சபையின் அலுவலர்களுடன் நேரில் சென்று அவ்வீதியை அளவீடு செய்தபோதும், அவ்வீதியின் அளவீடுகள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
வீதியின் நீளம் 33 மீட்டர் என்பது கொட்டகலை பிரதான வீதியிலிருந்து அளக்கப்பட வேண்டும் என தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அதன்படி அளவீடு செய்தபோது, பிரதான வீதியிலிருந்து சுமார் 10.5 மீட்டர் அளவிலான வீதி புனரமைப்பு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வீதிப் புனரமைப்பானது 39 மீட்டர் நீளமும் 2.45 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அளவீடுகள் அளவுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளன. அளவுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அளவுக்கு வீதியின் அகலம் குறைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீதி புனரமைப்புச் செலவினமாக பில் பத்திரத்தில் (Bill Form) 998,340.02 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்துச் செலவினமாக 105,314.89 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான துணை ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபையின் செயலாளரிடம் வினவியபோது, அவ்வாறான ஆவணங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த வீதி புனரமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள்ளாகவே வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையால், வீதியின் தரம் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அத்துடன், கடந்த வருடம் (2025) டிசம்பர் மாதம் வீதிப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த போதிலும், கடந்த மார்ச் மாதம் வரையிலும் தொழில்நுட்ப உத்தியோகத்தரால் வீதியின் பணிநிறைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் பிரதேச சபையின் செயலாளரிடம் வினவியபோது, “அளவுப் பட்டியல் தயாரித்தல், வீதிப் புனரமைப்பு வேலைகளை மேற்பார்வை செய்தல் அனைத்துமே தொழில்நுட்ப உத்தியோகத்தராலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் எது கேட்பதென்றாலும் தொழில்நுட்ப உத்தியோகத்தரையே கேட்க வேண்டும். செயலாளராகிய எனக்கு இதைப் பார்ப்பது வேலை இல்லை” எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், வீதியின் அளவுகளில் மாற்றம் இருப்பது தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும், ஒப்பந்தக்காரருக்கு செய்யப்பட்ட வேலைகளுக்கான பணம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், குறையாக உள்ள திருத்தப் பணிகள் இன்னொரு நிதிமூலத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனாலும், எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் பிரதேச சபையால் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் இதேபோன்ற குறைபாடுகள் காணப்படுவதாகவும், கேள்வி எழுப்புவோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களால் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் (CIABOC) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஆணைக்குழு தனது பூர்வாங்க விசாரணையை ஆரம்பித்துள்ளது.