நாட்டின் நெருக்கடி காலக்கட்டத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது பொருத்தமான செயற்பாடல்ல என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (15/12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ‘நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பாராளுமன்றத்தின் சபை ஒத்திவைப்பு காலத்தை நீடிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால், நாட்டில் நெருக்கடி ஏற்படும் போது இவ்வாறு இதைச் செய்வது பொறுத்தமல்ல. வரலாற்றில் பல்வேறு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும் இத்தகைய ஓர் சூழ்நிலையை எதிர்நோக்கியதில்லை. இவ்வாறான நெருக்கடி மிக்க சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தை மூடுவதற்கு பதிலாக சபை அமர்வுகளின் எண்ணிக்கைகளைத் தான் அதிகரிக்க வேண்டும்.
பாராளுமன்றம் ஒத்திவைப்பதால் கோப் குழு போன்ற முக்கியமான குழுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அக்குழுக்களை மீளமைக்கும் போது அரசாங்கம் ஏற்கெனவே வெளிப்படுத்திய விடயங்கள் தாமதமாகலாம்.
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய அரசியல் நெருக்கடியின் மத்தியில் இன்று இலங்கை சிக்கியுள்ளது. அரசாங்கம் எல்லாவற்றையும் கொவிட் மீது பழிசுமத்துகிறது. சகல பிரச்சினைகளுக்கும் கொவிட் காரணம் அல்ல. எரிவாயு பிரச்சினை கொவிட்டால் ஏற்பட்டதா? அல்லது மின்சார பிரச்சினை தான் கொவிட்டால் ஏற்பட்டதா?
ஒரு நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பதை நிரூபிக்க, நாட்டின் விலைக் கட்டுப்பாடே சிறந்த காரணியாகும் ஆனால் இன்று அந்த விலைக் கட்டுப்பாடு உண்டா? என லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.