வவுனியா ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நாட்கள் மேலதிகமாக தேவையேற்படின் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியிளாளர் வைத்தியகலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார்.
கல்வி திணைக்களத்தினூடாக வழங்கப்பட்ட ஒழுங்கில் வருகை தந்து ஊசிகளை ஏற்றிக்கொள்ளுமாறும், சகலருக்கும் ஊசிகள் வழங்கப்படுமென்பதனால் தேவையற்ற நெரிசல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் ஆரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியாவில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆரம்பித்தன. இதன்போது காலை வேளையில் தடுப்பூசிகள் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கணினி சிக்கல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் ஒரு மணித்தியாலம் அளவில் தாமதமானதாகவும் கூறப்பட்டது. அதேவேளை கடந்த முறை போலல்லாது அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் தடுப்பூசிகள் போடலாம் என்ற அறிவித்தலின்படி 500 இற்கு மேற்பட்டவர்கள் காலை வேளையிலேயே நிலையத்திற்கு சென்றமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, அவை அந்தந்த பாடசலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக வி தமிழுக்கு வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு வலய ஆசிரியர்களும், இன்றைய தினம் வருகை தந்தமையினால் அதிக ஆசிரியர்கள் வருகை தந்திருக்கலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா சுகாதார திணைக்களம் மூன்று தினங்களுக்கு கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுமென அறிவித்துள்ள போதும், வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களம் இரண்டு தினங்களுக்கு பாடசாலைகளை பிரித்து இரண்டு நாட்களுக்கு ஊசிகள் ஏற்றும் வகையில் அறிவித்துள்ளனர். நெரிசல் ஏற்படுவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைந்துள்ளது.
வவுனியா தெற்கு வலயத்துக்கு ஆசிரியர்களுக்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டமையினால், தாங்களும் தனியாகவே ஊசிகளை ஏற்றிக்கொள்ளவேண்டுமென தனது வலயத்துக்கு உட்பட்ட ஆசிரியர்கள் விரும்பியாமையினால், தங்களுக்குரிய வைத்திய அதிகாரியினை தொடர்புகொண்டு அவரின் அறிவுறுத்தலின் படி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு தனது வலயத்துக்கு உட்பட்ட ஆசிரியர்களை அனுப்பி வைத்ததாக வவுனியா வடக்கு வலய பணிப்பாளர் லெனின் அறிவழகன் தெரிவித்தார்.
நாளைய தினமும் தமது வலய ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 150 பேரளவில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு செல்லவுள்ளதாக தெரிவித்தார். ஆசிரியர்கள் அதிகமாக சென்றமையினால் சிக்கல் நிலை உருவானதாக தான் அறிந்ததாகவும், சுகாதர துறை உயிரை கொடுத்து அர்ப்பணிப்போடு வேலை செய்யும் நிலையில் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆசிரியர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்கள் அல்லாத சிலரும் ஊசியேற்றிக்கொண்டதாக எமக்கு தகவல்கள் கிடைத்துளளன. சரியான முறையில் விண்ணப்படிவங்களை சோதனை செய்யாமல் ஊசி போடப்பட்டிருக்கலாமென நாம் சந்தேகிக்கிறோம்.
ஆசிரியர்கள் தடுப்பூசி போட செல்லும்போது தங்கள் பாதுகாப்பை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தின் முன்னோடிகளான ஆசிரியர்கள் பொறுப்பற்ற விதத்தில் போதிய இடைவெளிகளின்றி செயற்பட்டமை கவலையளிப்பதாக கல்வி திணைக்கள, சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளணி பற்றாக்குறை அதிக வேலைப்பளு காரணமாக ஏற்பாடுகளில் தற்செயலாக சில தவறுகள் ஏற்படுவதாக சுகாதாதுறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான தருணங்களில் சுகாதர தரப்பின் மீது முழுமையாக பொறுப்பை திணிக்காமல், தமக்கான ஆதரவோடு செயற்படுமாறும் சுகாதர தரப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.
கொரோனா போன்ற கொடிய தொற்றும் நோய் பரவும் சூழலில் ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யமுடியாமல் போகும் வாய்ப்புகளுள்ளன. சகலதரப்பினரும் இணைந்து செயற்படுத்த வேண்டும். சரியான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்பாடல்கள் இல்லாமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது. உரிய தரப்புகள் சரியான முறையில் இந்த விடயங்களை கையாண்டு தடுப்பூசி ஏற்றும் திட்டத்தினை சிக்கல்களின்றி முடித்துக்கொள்வதே அனைத்து மக்களுக்கும் சிறப்பானது.
எமக்கு கிடைக்கும் விபரங்களின் அடிப்படையில், செய்திகளை வெளியிடுகிறோம். கிராமசேவகர்கள், திணைக்கள தலைவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் செயற்படுமாறு வி தமிழ் உங்களுக்கு அறிவுறுத்துகிறது.
