பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமான முறையில் வன்முறை கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார வேலை பார்த்த தொழிற்சாலைக்கு, பிரியந்த வகித்த பதவிக்கு மீண்டும் ஒரு இலங்கையர் துணிச்சல்கரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தீவிர இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்களால் மத நிந்தனை குற்றச்சாட்டுக்களால் அடித்துக்கொலை செய்யப்பட்ட பிரியந்தவுக்கு பதிலாக மற்றொரு இலங்கைப் பிரஜையை குறித்த தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
சியால்கோட் சம்பவத்திற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக பிரபல இஸ்லாமிய போதகர் மௌலானா தாரிக் ஜமீலுடன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு நேற்று முன்தினம் (22/12) விஜயம் மேற்கொண்டிருந்த சமய நல்லிணக்கத்திற்கான பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அஷ்ரபி, பிரியந்தவின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை தொழிற்சாலை உரிமையாளரே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அத்துடன் தொழிற்சாலை நிர்வாகம் இலங்கை பிரஜை ஒருவருக்கு குறித்த தொழிற்சாலையில் வேலையும் வழங்கியுள்ளது. இந்த அச்சம் நிறைந்த சூழலில், அவர்களில் ஒருவர் இங்கு பணிபுரியத் தேர்ந்தெடுத்ததற்காக இலங்கையர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் எனத் தெரிவித்தார்.
எனினும், குறித்த தொழிற்சாலையின் புதிய முகாமையாளரின் பெயரையோ அல்லது பிற விவரங்களையோ அவர் தெரிவிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.