அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவென, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (02/01) தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘சகல அரசியல் கட்சிகளும் பொதுவான திட்டத்தின்படி செயல்பட வேண்டிய நேரம் இது. அந்தவகையில், சகல கட்சிகளும் ஒன்றிணைந்து, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்காவது, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான கூட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
எனது யோசனையை அரசாங்கம் வரவேற்குமா? இல்லையா? என எனக்குத் தெரியவில்லை, ஆனால் தேசத்தின் நலனுக்காக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என நான் நினைக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
