நேற்று(04.01) பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜெயந்தின் இராஜாங்க அமைசர் பதவியினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார. இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னை அமைச்சு பதவியிலிருந்து நீக்கியது அதிஷ்டமே என சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
தான் தேசியப் பட்டியல் மூலமாக வரவில்லை. மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்தவன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களுக்கு தெரிவிக்கவேண்டியவற்றை தெரிவிக்க வேண்டும், அதனைத்தான் தான் செய்தேன்.
மக்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை, மற்றும் மரக்கறி விலைகள் உயர்ந்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, அரசாங்கத்தின் விவாசாய கொள்கை தவறானதே காரணம் என கூறியதே தான் பதவி நீக்கப்பட காரணம் எனவும் பாரளுமன்ற உறுப்பினர் ஊடகவியலாளர்களுக்கு கூறினார்.
“கேள்விகள் கேட்கப்படும் போது அதற்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும். கேட்ட கேள்விக்கு பொய்யாக பதில் சொல்ல முடியாது.மக்கள் பிரச்சனைகளை கதைக்க தற்போது பாராளுமன்றம் இல்லை.கூட்டங்கள் நடைபெறுவதில்லை. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே பேச வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவினால் நாடு தற்போது முகாமைத்துவம் செய்யப்படும் முறையில் மாறுவேடம் பூண்டு இராஜாங்க அமைச்சராக செயற்படமுடியாது. அதனால் இந்த பதவியிலிருந்து நீக்கியது அதிஷ்டமே” என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் “ஏன் இவர் இன்னமும் உள்ளார்? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போது இந்த நாட்டிலேயே இருக்காத, வாக்கை பாவிக்காதவரே எம்மை இந்த இடத்திலிருந்து நீக்க முயற்சிப்பதாகவும் மேலும் தெரிவித்த சுசில் பிரேம் ஜெயந்த் விரைவில் புதிய அரசியல் கூட்டணி உருவாகும். அந்த இடத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.
