‘சரியான தகவல்களை வைத்தே செய்திகளை வெளியிட வேண்டும்’

மனப்பாங்கு மற்றும் கற்பனை அடிப்படையில் அன்றி தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மாத்திரம் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (06/01) அரசாங்க வெளியீட்டு பணியகத்தினை திறந்து வைத்துவிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

21ஆவது நூற்றாண்டில் ஊடகவியலாளர்கள் தகவல்களையும், தரவுகளையும் மிகவும் சிறப்பான முறையில் சேகரித்து வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் தானும் ஒரு ஊடகவியலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

‘இலங்கையின் முதலாவது HIV நோயாளி ஒருவர் இனம் காணப்பட்ட காலப்பகுதியில், நான் எழுதிய செய்தியில் அவ்வாறு இனங்காணப்பட்ட நோயாளியன் பெயரினை சுட்டிக்காட்டி இருந்தேன். எழுதப்பட்ட நாளிதழ் ஒன்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பம் பல விளைவுகள் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் என் மீது நிறுவனத்தின் மூலம் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எனவே செய்தி ஒன்றை பிரசுரிக்கும் முன்னர் அந்த செய்தி தனிப்பட்ட நபரை குறிக்கின்றதா? எதிர்காலப் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுமா? என தீர விசாரித்து அதன் பின்னர் அந்த செய்தியினை பிரசுரிப்பது என்பதே முக்கிய விடயமாகும்’ என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(திருகோணமலை நிருபர்)

'சரியான தகவல்களை வைத்தே செய்திகளை வெளியிட வேண்டும்'

Social Share

Leave a Reply