வவுனியாவில் கொரோனா இறப்பு வீதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுவரையில் 60 வயதுக்கு மேற்பட்டவரகள் 3000 பேர் தடுப்பூசிகளை போடாமல் உள்ளனர். இவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்புகளும், இறக்கும் வாய்ப்புகளும் அதிகமாக காணப்படுகிறன.
சுகாதர திணைக்களம் அவர்களை தேடிப்பிடித்து தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களை எவ்வாறாவது பிடித்து ஊசிகளை ஏற்றிவிடுவோமென வவுனியா மாவட்ட தொற்றியிலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்று இறப்பு வீதம் மிகவும் சடுதியாக அதிகரித்து செல்வதாக வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களம் இன்று மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற வவுனியா கொரோனா கண்காணிப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.
இந்த நிலையில் சென்றால் மிக மோசமான அழிவினை நோக்கி வவுனியா மாவட்டம் செல்வதனை யாராலும் தடுக்க முடியாது.
தொற்றுக்கு காரணமாக மக்களே உள்ளனர். சுகாதர பிரிவும் அதனுடன் தொடர்புடையவர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற போதும் மக்களின் அசமந்த போக்கு இந்த இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமையே இறப்புகளுக்கு முக்கியமான காரணமாக அமைகிறது. வவுனியாவில் நேற்று (12.09.2021) வரை 136 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 2 தடுப்பூசிகளையும் பெற்று இறந்தவர்கள் இருவர் மாத்திரமே. அவர்களும் கூட வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் என அறிய முடிகிறது.
இதுவரையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 95 பேர் உயிரிழந்துள்ளனர். 30 தொடக்கம் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 35 பேரும், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 பேருமாவார்கள். இவர்களில் 88 நபர்கள் ஊசிகளை போடாதவர்கள். 46 நபர்கள் முதல் ஊசியினை பெற்றுக்கொண்டவர்கள்.
நேற்று (12.09.2021) வரை 6264 நபர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 785, 50-59 வயது பிரிவில் 830, 40-49 வயது பிரிவில் 994, 30-39 வயது பிரிவில் 1177, 20-29 வயது பிரிவில் 1406, 1-19 வயது பிரிவில் 1032, ஒரு வயதுக்கு உட்பட்டவர்களில் 40 பேரும் உள்ளடங்குகின்றனர்.
வவுனியாவில் நேற்று (12.09.2021) வரை 41,687 பேருக்கு இரண்டு ஊசிகளும் ஏற்றப்பட்டுள்ளன. 86,045 பேருக்கு முதல் ஊசி மட்டும் ஏற்றப்பட்டுள்ளது. அடுத்து வரும் 10 தினங்களில் இந்த தொகை மிகபெரியளவில் அதிகரிக்கும் வாய்ப்புகளுள்ளன.
மக்களே அவதானமாக இருங்கள். தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள். தடுப்பூசிகளை பெற்றால் கொரோனா தாக்கம் குறைவாக இருக்கும், இறப்புகள் குறைவடையுமென வைத்திய நிபுணர்கள் கூறி வருகின்றனர். சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். தேவையற்ற நடமாட்டங்களை குறைத்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்.
தொகுப்பு
ச.விமல்
பணிப்பாளர் – வி தமிழ்
