இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் நேற்று (12/01) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய போது, “துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாட்டில் புதிதாக துறைமுகமொன்றை நிர்மாணிக்க வேண்டும் என எண்ணியது 2005ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கமே என்பதை கூற விரும்புகிறேன்.
உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுடன் எமது நாடு போரிட்டுக் கொண்டிருந்த போதே நாம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க தீர்மானித்து பணிகளை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாறை இருப்பதாகவும் அதனால் கப்பல்கள் வர முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தமை எனக்கு நினைவிருக்கிறது.அன்று அவ்வாறானதொரு நிலைமையே காணப்பட்டது.
நாம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொறுத்துக்கொண்டு கொண்டு அவற்றுக்கு முகங்கொடுத்து புதிதாக துறைமுகமொன்றை நிர்மாணித்தோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமல்ல.
கொழும்பு தெற்கு துறைமுக முனையம் மற்றும் ஒலுவில் துறைமுகமும் நிர்மாணிக்கப்பட்டது. நான்கு வருடங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்னும் அதிகமாக செய்துவருகிறார்.
விமான நிலையங்களும் நிர்மாணிக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த பாரிய அபிவிருத்திகளை விமர்சித்தவர்களினால் நாடு கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த துறைமுகம் விற்கப்பட்டது.
அப்போது இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்ற விரும்பினோம். துறைமுகங்களை நிர்மாணிப்பதன் மூலம் எமது நாட்டை ஆசியாவின் பெரும் வல்லரசாக முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டோம். நாங்கள் இன்னும் நம்பிக்கையை கைவிடவில்லை.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் காரணமாக 1977ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு எல்லைக்கு அருகில் அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க அஞ்சுகின்றன. உங்களுக்கு நினைவிருக்கிறது. அன்று நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கு விரும்பவில்லை. அவ்வாறு யுத்தத்தை நிறைவுசெய்ய முடியும் என எதிர்பார்க்கவில்லை.
எனினும் நாம் யுத்தம் இடம்பெற்றக் கொண்டிருந்தபோதே அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை ஆரம்பித்தோம். விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தோம்.
கொவிட் தொற்று நெருக்கடியின் போது அனைத்து பணிகளையும் நிறுத்தி முன்னோக்கி செல்ல முடியாது. அதனாலேயே அவ்வாறானதொரு சவால்மிகுந்த தருணத்திலும் அபிவிருத்தி குறித்து சிந்திக்கின்றோம்.
அடுத்த மூன்றாண்டுகள் என்பதுதான் அரசுக்கு முக்கியம். அந்த மூன்று வருடங்கள் முக்கியமானவை. நாம் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், கடந்த காலத்தை அல்ல.
கடந்த காலத்தை அரசாங்கம் திரும்பப் பெற முடியாது. அதற்கு ஏற்றால் போல் செயற்பட்டால் மாத்திரமே அதனை திரும்பபெற முடியும்.
நாம் எதிர்கொண்டுள்ள கசப்பான சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த துறைமுகத்தின் அபிவிருத்தி ஆரம்பத்தில் எமது சொந்த பணத்திலேயே நிர்மாணிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த கிழக்கு முனையம் துறைமுக அதிகாரசபை தனது சொந்த நிதியில் கட்ட திட்டமிட்ட முனையமாகும். இந்த முனையம் தொடர்பான தேசத்தின் அபிலாஷைகளைப் பாதுகாக்க நாம் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
நாம் ஆட்சிக்கு வந்ததும் ஐ.நா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதாக உறுதியளித்த நாடு இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த பிரேரணையில் இருந்து விலகிக் கொண்டோம்.
நாங்கள் வந்தே அந்த பிரேரணையிலிருந்து விலகிக் கொண்டோம். நாங்கள் கையெழுத்தான எம்.சி.சி. ஒப்பந்தத்தை நிறுத்தினோம். இவற்றின் விளைவுகள் நமக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
இதை நாட்டை நேசிக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2015க்குப் பிறகு நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாட்டின் மீதான நம்பிக்கையை கைவிடாதீர்கள். கடந்து சென்ற இரண்டு வருடங்களை விமர்சகர்களுக்கு விட்டுவிடுவோம். எதிர்காலத்தை நாங்கள் பொறுப்பேற்போம் என பிரதமர் தெரிவித்தார்.