வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் உட்பட்ட குழுவினருக்கும், பிறிதொரு குழுவினருக்குமிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் வவுனியா,வைரவர் புளியங்குளம் பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் இளைஞர்கள் கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்றும் அதே இடத்தில அதிக இளைஞர்கள் ஒன்று கூடியிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தனது ஆதரவாளர்களுடன் அந்த இடத்துக்கு சென்றதாக அறியமுடிகிறது.
அந்த இடத்தில் இருந்த இளைஞன் ஒருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் உட்பட்ட குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், பாராளுமன்ற உறுப்பினர் அவரை தள்ளி விடுவதும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. அந்த இளைஞனை திலீபன் உட்பட்ட குழுவினர் தாக்க முயற்சித்தது போன்று வீடியோ காட்சியில் தென்படுகிறது.
சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு வருகை தந்த தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தகப்பனார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மகனை தாக்கிய இளைஞர்கள் மீது தாக்க முற்பட்ட வேளையில் திலீபன் MP உம் அந்த இடத்தில் காணப்பட இழுபறி நிலை ஏற்பட்டதுடன் திலீபன் மீதும் தாக்குதல் முயற்சி நடைபெற்றது.
அதன் பின்னர் அந்த இடத்திலிருத்து திலீபன் MP புறப்பட்டு சென்றுள்ளார். பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதோடு, விசாரணைக்காக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதேவேளை கைகலப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
பொலிஸ், விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு சென்ற வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் திலீபனும் அந்த இடத்துக்கு சென்றிருந்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.




