இலங்கைக்கான உதவி திட்டங்கள் தொடர்பிலான கூட்டங்கள் விரைவில் நிறைவு செய்யப்படுமென சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜப்பான் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தெற்காசிய நாடான இலங்கை மிகவும் மோசமான ஒரு பொருளாதர சிக்கலை சந்தித்துள்ளது. இவ்வாறான நிலையில் மக்கள் மிகவும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் தேவை கருதி இலங்கைக்கான நிதியினை வழங்குவது தொடர்பில் மிக ஆழமாக கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் அரசாங்கம் ஒன்று உள்ளது. நாங்கள் கூட்டங்களை தொடர்ந்து நடாத்த முடியும். எமது குழு விரைவில் அங்கு செல்லும். ஏற்கனவே சிறப்பான தொழில்நுட்ப கூட்டம் ஒன்று நிறைவடைந்துள்ளமையினால் நாம் நம்பிக்கையோடு உள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான அரசு வந்தாலும் பேச்சுவார்த்தைகளை நடாத்தும் எனவும், புதிய தலைவர் மகிழ்ச்சியாக சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்படவேண்டுமெனவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியாதவர் அல்ல எனவும், 6 தடவைகள் இலங்கையின் பிரதமராக கடமையாற்றியவர் எனவும், சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தைகளை கைகளில் வைத்துள்ளவர் எனவும் ஜப்பான் ஊடகம் தெரிவித்துள்ளது.