இலங்கையின் சவாலான இந்த கால கட்டத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றமை ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் முடிக்கு கொண்டுவரும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஸ்திரத்தன்மையினையும், சவால்களிலிருந்து வெளியே வருவதற்கான ஏற்ற சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்துவார் என தான் நம்புவதாக மேலும் கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கைகளை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐ.நா செயலாளர் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழிநிலையினை தீர்க்க தேசிய கொள்கையினை செயற்படுத்துவதனையும் வரவேற்றுள்ளார்.
சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதோடு, பொதுமக்களது ஆலோசனைகளை பெற்று, மனித உரிமையையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாத்து செயற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் மகளிரது செயற்பாடுகளையும், அவற்றை அதிகரிப்பதனை தான் ஊக்கப்படுத்துவதாகவும் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களது நன்மைகளுக்காக சமாதானத்தை கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி, மனித உரிமை போன்ற விடயங்களில் ஐக்கிய நாடுகளது ஆதரவு எப்போதும் இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் உண்டெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.