மக்களிடமிருந்து தப்பித்து ஒழிப்பதற்கு இடமொன்றை தேடி தயார் செய்யுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மருதானையில் சோஷலிச இளைஞர் அணியனால் நடாத்தப்பட்ட போராட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நாடாத்திய அதேவேளை, பலரை கைது செய்திருந்தனர். கண்ணீர் புகை குண்டு தாக்குதல், நீர்த்தாக்குதல் என்பன நடாத்தப்பட்டதோடு, பொலிஸார் பலரை தாக்கியிருந்தனர். அத்துடன் மிக மோசமாக தாக்குதல் நாடாத்தி அவர்களை வீதிகளில் இழுத்து சென்று கைது செய்துமுள்ளனர். 84 பேர் போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் பாதுக்காப்பு வலயங்கள் பிரகடனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரமான அனுரகுமார திஸ்ஸாநாயக “இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் நாட்டு மக்களிடமிருந்து ஒழித்துக்கொள்ள இடம் தேடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக விரோதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த செயல்களுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருவோம் என்பதனை கூறி வைத்துக்கொள்ள விரும்புகிறேன்” எனவும் அனுர மேலும் கூறியுள்ளார்.
“மக்களின் அமைதியான, நியாயமான போராட்டங்களை காவல்துறையினை கொண்டு அடக்கிவிடலாமென நினைத்தால் அது சிறிய காலத்துக்கு மட்டுமே. ரணிலும் அவரின் ஆதரவாளர்களும் இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சொல்லி வைத்துக்கொள்ள விரும்புகிறேன்” எனவும் அனுர எச்ச்ரரித்துள்ளார்.
“மக்களின் நிலையினை, அழுத்தங்களை விளங்கி கொள்ளுங்கள். பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கான உணவில்லை. பலருக்கு தொழில்லை, விவசாயிகளது விளைச்சல்களுக்கு நியாயமான விலையில்லை. இவ்வாறான நிலையில் அவர்கள் தங்களது எதிர்ப்பை காட்ட வழியில்லை.
மக்களின் உரிமை செயற்பாடுகளை தடுக்க நினைத்தால் மக்கள் இலட்ச கணக்கில் கொழும்பு நோக்கி வருவார்கள்” எனவும் அனுர கூறியுள்ளார்.