நடிகர் தர்ஷனின் இறுதி கிரியை அறிவிப்பு

நேற்று(01.10) இரவு காலமான இலங்கையின் தேசிய விருது பெற்ற நடிகரான தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(04.10) அவரது சொந்த ஊரான இறக்குவானையில் நடைபெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இன்று(02.10) மாலை 6 மணிக்கு ஜயரத்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை பிற்பகல் அவரின் பிறப்பிடமான இறக்குவானைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. கொழும்பில் அவரது உடலுக்கு இன்றும், நாளையும் அஞ்சலி செலுத்த முடியும்.

இலங்கை சினிமாவின் சிறந்த நடிகராக போற்றப்படும் தர்ஷன் தர்மராஜ் திடீர் சுகயீனம் காரணமாக நேற்றிரவு(01.10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் காலமானார். மாரடைப்பு காரணமாக 41 வயதில் இவர் காலமானார்.

பல தேசிய விருதுகளை வென்ற நடிகர் இவர். தமிழ் நாடக துறை, சினிமா மட்டுமன்றி சிங்கள சினிமா துறையிலும் பெயர் பதித்து விருதுகளை வென்றவர் தர்ஷன். இவரின் இழப்பு இலங்கை சினிமா துறைக்கு பாரிய இழப்பு.

இவ்வாறான நிலையில் இலங்கை ஒட்டு மொத்த இலங்கை கலைத்துறையும், ஊடக துறை சார்ந்தவர்களும் அன்னாரது இழப்பு இலங்கை சினிமா துறைக்கு பாரிய இழப்பு என கருத்து தெரிவித்து வருவதோடு அன்னாருக்கு அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

“இதுவரை காலமும் சிங்களத் திரைத்துறையில் எந்தவொரு தமிழ் கலைஞருக்கும் இல்லாத அபிமானத்தையும், மதிப்பு மரியாதையையும் பெற்றிருந்த நமது பெருமைக்குரியதொரு கலைஞன் தர்ஷன் தர்மராஜ். உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகள் பலவற்றை தனதாக்கிக்கொண்டு தன்னடக்கம் மிக்கவராயிருந்தவர்” என நாடக மற்றும் சினிமா துறையின் சிரேஷ்ட நடிகர் சந்திரசேகரன் அன்னாரது மறைவு குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

Social Share

Leave a Reply