மகளிர் ஆசிய கிண்ணம் – இலங்கை, இந்தியா அணிகள் வெற்றி

இலங்கை மகளிர் மற்றும் மலேஷியா மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (08.10) பங்களாதேஷில் சைல்ஹெட்டில் முதற் போட்டியாக நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றது. இதில் ஒஷதி ரணசிங்க ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், அணியின் தலைவி சமாரி அத்தப்பத்து 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஐநா ஹமிசா ஹஷிம், சஷா அஸ்மி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய மலேஷியா அணி 9.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 33 ஓட்டங்களை பெற்றது. இது ஆசிய கிண்ண மகளிர் 20-20 தொடரின் குறைந்த ஓட்டமாகும். பந்துவீச்சில் மல்ஷா ஷெஹானி 4 விக்கெட்களையும், இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இலங்கை அணி 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகியாக மல்ஷா ஷெஹானி தெரிவு செய்யப்பட்டார்.

மலேஷியா அணி இந்த போட்டியில் தோல்வியடைந்ததனால் முழுமையாக வெளியேறப்பட்டது.

இந்தியா மகளிர் மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கிடையில் சைல்ஹெட்டில் இரண்டாவது போட்டியாக நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷபாலி வேர்மா 55 ஓட்டங்களையும், ஸ்ம்ரிதி மந்தனா 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ருமனா அஹ்மத் 3 விக்கெட்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இதில் நிகர் சுல்தனா 36 ஓட்டங்களையும், பர்கான ஹக் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷபாலி வேர்மா, தீப்தி ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினாரகள். ஷபாலி வேர்மா அவரின் முதல் இரண்டு விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார்.

இந்தியா அணி 59 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகியாக ஷபாலி வேர்மா தெரிவு செய்யப்பட்டார்.

நாளை (09.10) காலை 8:30 இற்கு மலேஷியா மகளிர் மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகளுக்கிடையில் சைல்ஹெட்டில் முதற் போட்டியாக நடைபெறவுள்ளது. இது மலேஷியா அணியின் இறுதிப் போட்டியாகும். மதியம் 1:00 மணிக்கு பாகிஸ்தான் மகளிர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கிடையில் சைல்ஹெட்டில் இரண்டாவது போட்டியாக நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply