கானா, தென் கொரியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலக கிண்ண தொடரின் போட்டியில் கானா அணி 3-2 என வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமான போட்டி இறுதி வரை கடும் போராட்டமாக சென்று முடிந்தது.
போர்த்துக்கல் அணியுடன் தோல்வியடைந்த நிலையிலேயே கானா அணி இந்த வெற்றியினை பெற்றுள்ளது. தென் கொரியா அணி உருகுவே அணியுடன் சமநிலை முடிவினை பெற்றுக் கொண்டது. இவ்வாறான நிலையில் அடுத்த இறுதி போட்டிகளிலேயே இரண்டாம் சுற்று வாய்ப்புகள் தெரியவரும்.
முதற் பாதியின் 24 மற்றும் 34 ஆவது நிமிடங்களில் மொஹமட் சலிசு, குடுஸ் மொஹமட் ஆகியோர் அடித்த கோலின் மூலமாக கானா முன்னிலை பெற்றது. 58 ஆவது நிமிடத்தில் தென் கொரியா அணியின் சோ கியூசங் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். 3 நிமிடங்களில் மீண்டும் அவர் ஒரு கோலை அடித்து போட்டியினை சமன் செய்தார். மேலும் 7 நிமிடங்கள் சென்ற வேளையில் கானா அணி சார்பாக குடுஸ் மொஹமட் தனது இரண்டாவது கோலை அடித்து கானா அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். போட்டி அவ்வாறே 3-2 என்ற கோல் கணக்கில் நிறைவுக்கு வந்தது.
தென் கொரியா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் அவர்கள் தவறவிட்டமை அவர்களுக்கு பின்னடைவை வழங்கியது.
கானா அணி 2006 ஆம் ஆண்டு முதலாவது உலக கிண்ணத்தில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியது. 2010 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் பல அணிகளுக்கு அதிர்ச்சி வழங்கி காலிறுதி வரை முன்னேறியது. 2018 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கு தெரிவாகாத கானா இந்த வருடமும் அதிர்ச்சிகளை வழங்க கூடிய நிலை காணப்படுகிறது.
போட்டி நிறைவடையும் தறுவாயில் கோனார் கிக் ஒன்றினை மத்தியஸ்தர் வழங்காமல் போட்டியினை நிறைவு செய்தமையினால் தென் கொரியா அணிக்கும் மத்தியஸ்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது தென் கொரியா பயிற்றுவிப்பாளருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.