கணித பாட வினாத்தாள் வெளியானதால் சிக்கல் – பரீட்சை இடைநிறுத்தம்.

அநுராதபுர கல்வி வலயத்தில் இரண்டாம் தவணை பாடசாலை பரீட்சையின் 10ம் தர கணித வினாத்தாள் வெளியானதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாக நேற்று (19.12) நடைபெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 22ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் கல்வி வலய அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணைக்கான கணித பாட வினாத்தாள் வாட்ஸ்அப் மூலம் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளைக் கொண்ட கணித வினாத்தாள் முன்கூட்டியே அச்சிடப்பட்டு அனுராதபுரம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், இந்த வினாத்தாள் முன்கூட்டியே சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் ஆசிரியர் சங்கங்களுக்கும் வலய கல்வி அலுவலகத்திற்கும் அறிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள 106 பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சையின் கணிதப் பாடத்திற்கான சுமார் 5,000 வினாத்தாள்கள் பிராந்தியக் கல்வி அலுவலகத்தினால் அச்சிடப்பட்டு தமது சங்கமும் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணதின் கொழும்பு கல்வி வலயத்தில் தரம் 10 மற்றும் 11க்கு கடந்த மாதம் 18ம் திகதி வழங்கப்படவிருந்த விஞ்ஞான வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் வினாத்தாள் வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply