பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் மனைவியின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் கண்டி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றில் திருட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கண்டி பொலிஸார், சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்களை திருடிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் நேற்று (19.12) மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் புகுந்து இந்தப் பொருட்களை திருடியதாகவும் தெரியவந்துள்ளது.
வீட்டின் அருகே உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் திருடிய பொருட்களை அவர் தோளில் சுமந்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களை மஹையாவ பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.