‘சிங்கள மக்கள் பயப்பட வேண்டாம்’ – ஜீவன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் என்று சரியாக புரிந்துகொள்ளுமாறு இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையானது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே அதிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு நாம் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

யட்டியாந்தோட்ட எக்கலாஸ் கீழ்பிரிவு தோட்டத்தில் முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான அண்ணாமலை பாஸ்கரன் ஏற்பாட்டில் இன்று (08.02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கின்றது. அவற்றில் உள்ள விடயங்களை அமுல்படுத்த முழு ஆதரவும் வழங்கப்படும். அத்துடன், மலையக மக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும், வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற முக்கிய விடயத்தை ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக சிலர் வெளியிட்டுள்ள கருத்துகள் அநீதியானது எனவும், இந்த திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கும் அதிகாரத்தை தரக்கூடிய பொறிமுறையாகும். அதன்மூலம் மக்கள் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம், எனவே, 13 குறித்து உருவாக்கப்பட்டுள்ள போலி விம்பத்தை சிங்கள மக்கள் நம்பக்கூடாது எனவும் ஜீவன் தெரிவித்துள்ளார்.

'சிங்கள மக்கள் பயப்பட வேண்டாம்' - ஜீவன்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply