இலங்கை ரக்பி நிர்வாகதத்திற்கான இடைக்கால நிர்வாக சபை இன்று(12.04) விளையாட்டு துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின், டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவாகர மற்றும் நீர்ப்பாசன அமைசர் ரொஷான் ரணசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டு புதிய நிர்வாகத்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னாள் இலங்கை ரக்பி அணியின் வீரரும், இலங்கை மத்தியஸ்தர்கள் சங்கத்தின் தலைவருமான சுலா தர்மதாச தலைவராகவும், ஜனாதிபதி சட்டத்தரணி ஷானாக ரணசிங்க செயலாளராகவும், ஹவ்லோக் கழகத்தின் தலைவரும், ஸ்ரீலங்கா ரக்பியின் முன்னாள் செயலாளருமான துஷித பீரிஸ், பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல நிறுவனங்களின் பல முக்கிய முகாமைத்துவ பதவிகளை வகித்த தமித்த விதானகே, முன்னாள் இலங்கை அணி வீரரான கிஷான் முஸாபர், ரக்பி மற்றும் நீர் போலோ விளையாட்டுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த சட்டத்தரணி சவந்த டி சேரம், வான்படை ரக்பி தலைவர் குரூப் கப்டன் சுபாஷ் ஜயதிலக்க, முன்னாள் மத்திய மாகாண ரக்பி தலைவர் பிரதீப் பஸ்நாயக்க, இராணுவ கழகத்தின் வீரரும், இலங்கை 15 வயது அணியில் விளையாடியவருமான ஓய்வுபெற்ற பிரிகேடியர் சுனில் ரணசிங்க ஆகியோர் ஒன்பது பேரடங்கிய நிர்வாக சபையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைக்கால நிர்வாக சபை 06 மாதங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காலப்பகுதிக்குள் ஸ்ரீலங்கா ரக்பிபியினை மீள நிர்வகித்து உரிய நிலைக்கு கொண்டு வந்து தேர்தலை நடாத்தி புதிய நிர்வாகத்தை உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைசர் ரொஷான் இந்த நிகழ்வில் தெரிவித்தார்.
தாங்கள் இன்றே முதற் தடவையாக சந்தித்துள்ளளதாகவும், குறுகிய காலப்பகுதியே காணப்படுவதனால் விரைவில் வேலைகளை ஆரம்பித்து பணிகளை முன்னெடுத்து செல்வோம் எனவும் நம்பிக்கை வெளியிட்ட தலைவர், என்னவித வேலைத்திட்டங்கள் மற்றும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இதுவரை பேசவிலை எனவும் கூறினார்.
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழு அமைச்சரின் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி இலங்கை ரக்பி அப்போதைய விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்டதாகவும், அதனை கடந்த திங்கட்கிழமை இரத்து செய்ததாகவும் அமைச்சர் ரொஷான் மேலும் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்ட நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும், குறித்த வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெறும் நிலையில் அதற்கும் உட்பட்டே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக அமைசர் விளக்கமளித்தார்.
ஆசிய ரக்பி சம்மேளனம், இலங்கை ரக்பி மற்றும் அதன் முன்னாள் தலைவர் ரிஸ்லி இலியாஸ் ஆகியோரை தடை செய்துள்ளாகவும் கூறிய அமைச்சர், விரைவில் அந்த சங்கத்துடன் சந்திப்பை மேற்கொண்டு அந்த தடையை தளர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகும் தெரிவித்தார்.
ஆசிய சம்மேளனம் இலங்கை மற்றும் விளையாட்டு அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவதாக கடிதம் மூலம் உறுதியளித்துள்ளதாக மேலும் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வழக்கு நடைபெறுவதனால் அந்த கடிதத்தை வெளிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் K. மகேசன் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

