இலங்கையில் ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆசிய ரக்பி சம்மேளனத்தின் பூரண ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இருவருக்குமான விசேட கலந்துரையாடல் நேற்று (19.04) டுபாயில் உள்ள ஆசிய ரக்பி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடங்களில் இலங்கை ரக்பி சம்மேளனம் மேற்கொண்ட பல நடவடிக்கைகள், விளையாட்டின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்காமை மற்றும் இலங்கையின் அடிப்படை சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் தெளிவுபடுத்தபட்டுள்ளது.
மேலும் இவ்வாறான நிலையை இனியும் தொடராமல் இருக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் சரியான முறைகளின் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டு, சிறந்த நிர்வாகத்தின் கீழ் ரக்பி விளையாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கைஸ் அல் தலாயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு நிலையான குழுவொன்றை நியமிப்பது காலத்துக்கு உரிய தேவை எனவும், ரக்பியின் முன்னேற்றத்திற்கு இலங்கைக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ஆசிய ரக்பி சம்மேளனத்தின் பூரண ஆதரவை வழங்குவதாகவும் அதன் தலைவர் கைஸ் அல் தலா தெரிவித்துள்ளார்.
இலங்கை ரக்பி தொடர்பிலான உண்மைகளை தெளிவுபடுத்தி தாம் அனுப்பிய கடிதத்திற்கு சாதகமாக பதிலளித்தமைக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஆசிய ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.