நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தங்க நெக்லஸ் மற்றும் காதணிகள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று லிந்துலை பகுதியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21.04) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வால்ட்ரிம் தோட்டத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெங்கடாசலம் சத்தியபாமா என்ற 68 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மகள் மற்றும் மருமகன் வேலைக்குச் சென்றதையடுத்து, வீட்டில் தங்கியிருந்த பேத்தியும் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி இவரை கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.