பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (24.04) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் மாதாந்த எரிபொருள் கொள்வனவு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், கடந்த மூன்று வாரங்களாக நாளாந்த எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் வெளியீடு குறித்த தரவுகளை கண்காணித்தத்தில், எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்புக்கு முன்னர் இருந்ததைப் போலவே தினசரி எரிபொருள் விநியோகம் மற்றும் கொள்வனவு அமைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னர் QR குறியீட்டின் துஷ்பிரயோகம் கணிசமான அளவு குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் இந்த விதிமுறைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் விநியோகஸ்தர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்த கோட்டா விபரம்:-
பயணிகள் முச்சக்கர வண்டிகள் – 15 லீட்டர்
பொதுவான முச்சக்கர வண்டிகள் – 8 லீட்டர்
மோட்டார் சைக்கிள் – 7 லீட்டர்
பேரூந்துகள் – 60 லீட்டர்
கார் – 20 லீட்டர்
லொரி – 75 லீட்டர்
வான் – 30 லீட்டர்
விசேட போக்குவரத்து வாகனங்கள் – 30லீ ட்டர்