ஜூலை மாதம் 1ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சாரசபையால் தயாரிக்கப்பட்ட மின் கட்டணம் தொடர்பான யோசனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு இரு தடவைகள் மின் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்படி, ஜனவரி மாதம் 1ம் திகதி மற்றும் ஜூலை முதலாம் திகதிகளில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் உற்பத்தி, மின் பாவனை, எரிபொருள், நிலக்கரி உள்ளிட்ட ஏனைய மூலப் பொருள்களின் தரவுகள் என அனைத்தையும் கருத்திற்கொண்டே மின் கட்டண திருத்த யோசனையை மின்சாரசபை தயாரித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
மின்சாரத்தைக் குறைந்தளவில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை கிடைக்கும் வகையிலும் இந்த யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.