அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில்தான் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 1) இடம்பெறவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (28.06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”69 இலட்ச மக்கள் பொம்மைகள் அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் என்றும் இடம்பெறாத சம்பவங்கள்தான் தற்போது இடம்பெறுகிறது. நிறைவேற்றுத்துறை அதிகாரம் சட்டவாக்கத்துறையின் மேன்மையை மலினப்படுத்துகிறது.
தேசிய கடன் மறுசீரமைப்பால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படாது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் தேசிய கடன் எவ்வாறு மறுசீரமைக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.