இலங்கையில் இன்று(13.07) ஆரம்பித்த ஆசியாவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான தொடர் ஆரம்பித்துள்ளது. இன்றைய முதற் போட்டிகளில் இலங்கை A அணி மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 133 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மினோட் பானுக 57 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரிப்போன் மொண்டல், சோம்யா சர்கார் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 301 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சைப் ஹசன் 53 ஓட்டங்களையும், மொஹமட் நைம் 51 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரமோட் மதுஷான், டுஷான் ஹேமந்த ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
ஆப்கானிஸ்தான் A மற்றும் ஓமான் A அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் A அணி 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸுபைட் அக்பாரி 79 ஓட்டங்களையும், ஷஹீதுல்லா 45 ஓட்டங்களையும் பெற்றனர். ஓமான் அணியின் பந்துவீச்சில் கலீமுல்லா, அஃகிய்ப் இலியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அயான் கான், சொஹைப் கான் ஆகியோர் தலா 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மொஹமட் இப்ராஹிம், ஷியா உர் ரெஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.