இலங்கையில் ஆய்வுக்கூட எலிகளாக மாறிய மக்கள் !

சுகாதார துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைகளுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சரோ, அல்லது சுகாதார அமைச்சரின் செயலாளரோ உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது வயிற்று வலிக்காக வைத்தியாசலைக்குச் சென்ற 21 வயது பெண் ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், தற்போதைய ஆட்சியாளர்கள் பொருளாதார நெருக்கடியில் தீவிர நடவடிக்கை எடுக்காமல், சாமானிய மக்களைப் பலிகடா ஆக்கி, வழக்கமான சுரண்டலை மட்டுமே மேற்கொண்டு வருவதைப் பார்க்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மறுபுறம், மருந்துகளின் தரத்தில் கடுமையான சிக்கல்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், நம் நாட்டு நோயாளிகள் ‘ஆய்வுக்கூட எலிகளாக’ மாறிவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று மருத்துவமனைக்கு செல்வது பிணவறைக்கு செல்வது போல் ஆகிவிட்டது எனவும், இந்நிலை நீடித்தால், ‘இலவச சுகாதார சேவை’ என்றழைக்கப்பட்டாலும், அதன் உதவியை நாடும் மக்களுக்கு பலன் கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி உள்ள ஒரு நாட்டில், அவசரகால கொள்முதல் செய்ய செல்லக்கூடாது. முன் திட்டமிடப்பட்ட, முறையான தரமான மருந்துகளை முறையான டெண்டர் முறையில் வாங்க வேண்டும்.

ஆனால் இந்த சுகாதார அதிகாரிகள் மருந்து தட்டுப்பாடு ஏற்பட அனுமதித்து, ‘அவசர கொள்முதலின்’ கீழ் உரிய மருந்தை வாங்க நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால் ​​நம் நாட்டு மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நாடு ஒரு நாடா? மரங்களை வெட்டுவது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கிறது. ஆனால் இதுபோன்ற கேவலமான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வெட்டுவதற்கான முடிவுகளை அமைச்சரவை எப்போது எடுக்கும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சின் செயலாளரோ பதவி விலக வேண்டும். ஆனால் அவர்களில் யாரும் பதவி விலக மாட்டார்கள். அவர்களுக்கு அதைப் பற்றிய உணர்வு இல்லை. அதனால்தான் இவ்வாறான துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply