மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துக்கள் பகிரப்படுவதாகவும், இவ்வாறான பொருப்பற்ற நடத்தையை முற்றாக கண்டிப்பதாகவும்,மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபகாலமாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் பொது மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம்.
கடுமையான சந்தர்ப்பங்களில் நல்ல சுகாதார சேவையை வழங்க பொது நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பற்ற சமூக ஊடகச் செயற்பாட்டின் காரணமாக பலியாகியிருப்பது களுத்துறை போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவுதான்.
மூன்று இருதயநோய் நிபுணர்கள் மற்றும் இதர அர்ப்பணிப்புள்ள உதவி ஊழியர்களை உள்ளடக்கிய இந்த பிரிவு, 2021 ஆம் ஆண்டு முதல் தொலைதூர வைத்தியசாலைகளுக்குச் செல்லாமல் 24 மணித்தியாலங்களுக்குள் களுத்துறை பிரதேச மக்களுக்கு தனது சேவையை வழங்குகிறது.
எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிக்கும் சிலரின் இந்த பொறுப்பற்ற நடத்தையை நாங்கள் முற்றாக கண்டிக்கும் அதே வேளையில், கடினமாக உழைக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையை தடுக்க தற்போதுள்ள விதிமுறைகளின்படி சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.