பாரிய கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலில் இரண்டு பெண்களும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வர்த்தக ஸ்தலங்களுக்கு இரவு வேளைகளில் புகுந்து பொருட்களை திருடுவதில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹலவத்த – தெதுரு ஓயா பிரதேசத்தில் பூகொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஜவுளிக் கடைக்குள் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு சிறிய லாரி மற்றும் சுமார் 10 லட்சம் மதிப்பிலான துணிகள், 27 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களில் மூவர் தெதுரோயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பாதுக்க பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேகநபர்களை இன்று (30.08)பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.