நாட்டின் ஆட்சியாளர்கள் பணத்தை எவ்வாறு வீண் விரயம் செய்கிறார்கள் என்பதை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு அரசியல்வாதிகளை பற்றி பெரியவர்களுக்கு நன்கு தெரிந்தாலும் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்ரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாடசாலைகளில் குறைபாடுகள் ஏற்படும் போது பொறுப்பான முகாமையாளர்களிடம் கேட்டால் நாட்டில் பணம் இல்லை என கூறினாலும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்றார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்க அதிகாரிகள் அந்த பயணங்களுக்கு செல்ல அனுமதிக்கலாம் என்றாலும் நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் அந்த தூதுக்குழுக்களுடன் செல்வதை அங்கீகரிக்க முடியாது என்றும், மக்களின் வரிப்பணம் அவர்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கவும், கணினி வழங்கவும் பணம் இல்லை என்றும், இந்த விடயங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களிடம் தெரிவிக்கும் போது பாடசாலைக்குள் அரசியல் பேசுவதாக சேறுபூசும் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணங்களுக்கு தனது அரசியல் கூட்டாளிகளை அழைத்துச் செல்லும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி பாடசாலை மாணவர்கள் கூட அறிந்திருக்க வேண்டும் என்றும், அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி, குழந்தைகளிடம் கூட திருட்டை, மோசடியை, ஊழலை மறைக்கிறார்கள் என்றும், இந்த தகவலை மறைக்கும் அரசியல் கட்டமைப்பில் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் 34 ஆவது கட்டமாக கெஸ்பேவ வித்யாலோக மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று(01.10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த 34 வேலைத்திட்டங்களுக்காகவும் 300 இலட்சம் ரூபா ஐக்கிய மக்கள் சக்தியால் செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் தீராத பிரச்சினைகள் நிலவும் போது அரசியல் ஆதாயத்திற்காக எம்.பி.க்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது பெரும் துரோகத்தன விடயமாகும் என்றும், இந்நிலையில் 3 ஆவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க தயாராகியுள்ளனர் என்றும், IMF உடன்படிக்கையின் நிபந்தனைகளை கூட அவர்கள் இன்னும் மக்களிடம் முன்வைக்கவில்லை என்றும், இவை அனைத்திற்கும் அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
IMF இருந்து பெற வேண்டிய இரண்டாம் கடன் தவணை கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும், அரச வருவாய் இலக்கு எட்டப்படாததே இதற்குக் காரணம் என்றும், வரி அறவீட்டு நிர்வாகத்தின் பலவீனமும் ஒரு காரணம் என்றும், இதனால் போதியளவு அரச வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தமது அரசியல் நண்பர்களுக்கு தாம் விரும்பியவாறு வரிச்சலுகைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் வழங்கியுள்ளனர் என்றும் கூறினார்.