ஸ்ரீலங்கா கிரிக்கெட், தனது இலங்கை வங்கி கணக்கிலிருந்து 20 மில்லியன் டொலர் பணத்தை மூன்றாம் தரப்பு கணக்கிற்கு மாற்றுவதற்கு முயற்சித்ததாக பாராளுமன்றத்தில் விளையாட்டு துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை டொலரிலேயே வைத்திருப்பதாகவும் தேவை ஏற்படும் போது இலங்கை பணத்திலான வங்கி கணக்கிற்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக செலவுகளுக்காக இந்த பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், மூன்றாம் தர கணக்கிற்கு மாற்றம் செய்யப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் இது போன்ற தகவல்களை வெளியிட்டு மக்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான பிழையான விம்பத்தை ஏற்படுத்தவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குற்றம் சுமத்தியுள்ளது.