களுத்துறை தெற்கில் நேற்று (18.11) இரவு பாதசாரி கடவையைக் கடக்கும்போது கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த 56 வயதான ராகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தெஹிவளை, களுபோவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
களுபோவில வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த முதியவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த 88 வயதான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை தொடர்ந்து முச்சக்கரவண்டியின் சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.