விளையாட்டு துறை அமைச்சராக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அமைச்சரவை கூட்டத்துக்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சென்ற போது அவர் பதவியினால் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்ட கடிதம் அமைச்சருக்கு வழங்கப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று(27.11) மாலை விளையாட்டு துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ரொஷான் ரணசிங்கவின் மற்றுமொரு அமைச்சு பதவியான நீர் வழங்கல் அமைச்சு பதவி, வனஜீவராசிகள், வன வள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியர்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் இன்று பாரளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ரொஷான் ரணசிங்க கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜயசேகர போன்ற விளையாட்டு தெரிந்தவர்களுடன் தான் பேச தயாராக இருப்பதாகவும், ரொஷன் ரணசிங்க போன்ற மழைக்கு கூட ஓடாதவர்களுடன் தான் பேச தயாரில்லை எனவும் கூறியிருந்தார்.
அமைச்சர் மாற்றம் மூலமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்ட ஊழல் சர்ச்சை நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊழலுக்கு உட்பட்டது எனவும், அதன் நிர்வாகம் மாற்றப்படவேண்டுமென்றும் ஆனால் அதற்க்கு மாற்று வழிகள் உள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாரளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.