தெற்கு கரையோரங்களில் உள்ள சுற்றுலா தொழில்துறை தொடர்பில் ஆராயவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் தங்காலை மற்றும் காலிக்கு பிரதேசங்களுக்கு இன்று(17) நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி சுற்றுலா ஹோட்டல்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
சுற்றுலாத் துறையினர் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளைத் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.
அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சுற்றுலா வர்த்தகச் சமூகத்திற்கு அறிவுறுத்தியதன் பின்னர் புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக, வர்த்தகச் செயற்பாடுகளில் புதிய பரிணாமத்தை எட்டியிருப்பதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
சீனிமோதர, திக்வெல்ல, நில்வெல்ல, ஹிரிகெட்டிய, வெலிகம, ஹபராதுவ பகுதிகளில் அமைந்திருக்கும் சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் வெலிகம – அலைச்சறுக்கு பயிற்சி கல்லூரிக்கும் விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை ஜனாதிபதி நேரில் ஆராய்ந்தார்.
பின்னர் உடவடுன சுற்றுலா வலயத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான யோசனைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
அதனையடுத்து காலி – தங்காலை கடற்கரைகளில் கூடியிருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, தனது வருகையை அறிந்து வீதியின் இரு பகுதிகளிலும் கூடியிருந்த மக்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவங்கள் பலவற்றை பெற்றுகொடுப்பதற்கான முயற்சிகளில் பல காலமாக ஈடுபட்டு வரும் Jeffry Dobbs என்பவரும் ஜனாதிபதியுடன் இந்த சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.