இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(23) நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
கொல்கத்தா அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியிருந்தது.
இருப்பினும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சால்ட் மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.
சால்ட் 40 பந்துகளில் 54 ஓட்டங்களையும் ரமன்தீப் சிங் 17 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பின்னர், ரஸ்ஸல் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி இணைப்பாட்டத்தின் ஊடாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 63 ஓட்டங்களையும் ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஹைதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் மார்கன்டே 2 விக்கெட்டுகளையும் அதிகப்பட்சமாக கைப்பற்றினர்.
209 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு மயங் அகர்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
மயங் மற்றும் அபிஷேக் இருவரும் 32 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த ஏனைய வீரர்களினால் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இருப்பினும், 12வது ஓவரில் களத்திற்கு வந்த ஹென்ரிச் கிளாசென் அணியை இறுதி ஓவர் வரை அழைத்து சென்றார். ஷாபாஸ் அஹமட்டின் அதிரடி ஆட்டமும் அணிக்கு வலு சேர்த்தது.
ஹைதராபாத் அணிக்கு வெற்றி பெறுவதற்கு இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, கொல்கத்தா அணி சார்பில் பந்து வீசும் பொறுப்பு ஹர்ஷித் ராணாவிற்கு வழங்கப்பட்டது.
இறுதி ஓவரின் முதல் பந்திலேயே கிளாசென் 6 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, மூன்றவாது பந்தில் ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழந்தார். ஓவரின் 5வது பந்தில் ஹர்ஷித் ராணா கிளாசெனின் விக்கெட்டையும் பெற்றுக் கொள்ள, கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது.
கிளாசென் 29 பந்துகளில் 63 ஓட்டங்களையும் ஷாபாஸ் அஹமட் 5 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும் ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் அதிகப்பட்சமாக கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரஸ்ஸல் தேர்வு செய்யப்பட்டார்.