ஹைதராபாத் அணியின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பெங்களூர்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

ஹைதராபாத்தில் இன்று(25.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பெங்களூர் அணி சார்பில் விராட் கோலி 51 ஓட்டங்களையும், ராஜட் பட்டிதார் 50 ஓட்டங்களையும் மற்றும் கமரூன் கிரீன் 37 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் ஜெயதேவ் உனட்கட் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் மற்றும் மார்கன்டே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

207 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. 

ஹைதராபாத் அணி சார்பில் சபாஷ் அஹமட் 40 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 31 ஓட்டங்களையும் மற்றும் பட் கம்மின்ஸ் 31 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பெங்களூர் அணி சார்பில் பந்துவீச்சில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா மற்றும் பர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ் மற்றும் யாஷ் தயால் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

ஸ்வப்னில் சிங், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய முதலாவது போட்டியிலேயே, ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களான எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் ராஜட் பட்டிதார் தெரிவு செய்யப்பட்டார். 

ஆறு போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்த பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியின் சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தியமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய பெங்களூர் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 4 புள்ளிகளுடன் தொடர்ந்து 10ம் இடத்திலும், ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் 3ம் இடத்திலுள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

கொல்கத்தாவில் நாளை(26.04) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply