இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தீர்மானமிக்க போட்டி இன்று(18.05)நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள இந்த போட்டியில் வெற்றிப் பெறும் அணியே இறுதி அணியாக Playoffs சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் Playoffs சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் தரவரிசையில் 14 புள்ளிகளுடன் 4ம் இடத்திலுள்ள சென்னை அணி இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றியீட்டினால் Playoffs சுற்றுக்கு தகுதி பெறும்.
மறுபுறம், 12 புள்ளிகளுடன் தரவரிசையில் 7ம் இடத்திலுள்ள பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றியீட்டுவதுடன், சென்னை அணியை விட அதிகளவான Net Run Rate புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக Playoffs சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
தீர்மானமிக்க இந்த போட்டி பெங்களூரு எம். சின்னசுவாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வானிலை அறிக்கைகளின் படி போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் பெங்களூரு நகரில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பு காணப்படுகின்றது. மழைக் காரணமாக போட்டி கைவிடப்பட்டால் சென்னை அணி Playoffs சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடரின் முதல் 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டியிருந்த பெங்களூரு அணி, இறுதியாக பங்கேற்க 5 போட்டிகளிலும் வெற்றியீட்டி, Playoffs வாய்ப்பினை நெருங்கியுள்ளது. இதன்படி, பெங்களூரு அணி Playoffs சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில், ஐ.பி.எல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இந்த சந்தர்ப்பம் பதிவாகும்.
பெங்களூரு அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான வில் ஜாக்ஸ், டி20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளமையினால் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. வில் ஜாக்ஸ் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
சென்னை அணியின் முக்கிய வீரர்களான மொயின் அலி மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரும் டி20 உலக கிண்ணத்தில் பங்கேற்பதற்காக தத்தமது நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில், சென்னைக்கு பின்னடைவாக அமைவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறாத பட்சத்தில், அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனிக்கு இன்றைய போட்டி ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியாக அமைவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் தோனி ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இதன் காரணமாகவும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் மீது இரசிகர்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.