டி20 உலகக் கிண்ணத் தொடரின் சொந்த மண்ணில் அமெரிக்கா பிரபல வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் இறுதியில் இரு அணிகளும் சம எண்ணிக்கையான ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையினால், போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அமெரிக்கா, டாலஸில் நேற்று(06.06) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் பாபர் அசாம் 44 ஓட்டங்களையும், ஷதாப் கான் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார். அமெரிக்க அணி சார்பில் பந்துவீச்சில் நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுக்களையும் நேத்ராவல்கர் 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
159 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அமெரிக்க அணி சார்பில் அணித் தலைவர் மொனாங்க் படேல் 50 ஓட்டங்களையும், ஆரோன் ஜோன்ஸ் 36 ஓட்டங்களையும், ஆண்ட்ரீஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டி சமநிலையில் நிறைவடைந்தமையினால் இரு அணிகளுக்கு இடையில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் அமெரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சூப்பர் ஓவரில் 19 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இதன்படி, இந்த போட்டியில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் 5 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக அமெரிக்க அணித் தலைவர் மொனாங்க் படேல் தெரிவு செய்யப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் ஊடாக அமெரிக்க அணி இரண்டு போட்டிகளில் 2 வெற்றிகளுடன் A குழாமின் தரவரிசையில் முதல் இடத்திலுள்ளது.