யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்படும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனா, அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதிலிருந்து வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தொடர்பில் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுப்பதாகவும், வாய்மொழி துன்புறுத்தல்களை வழங்குவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தகால காழ்ப்புணர்வுகளினால் பிரசவ விடுமுறையில் இருந்த வைத்தியர்களின் நலன்களை கருத்திற்கொள்ளாமல், அவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியேறுமாறும், இடமாற்றத்தை பெற்றுக்கொள்ளுமாறும் பயணித்துள்ளதாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் சமன் பத்திரனவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் நேற்று(03.07) வைத்தியசாலைக்கு கள விஜயம் செய்திருந்ததுடன் வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனாவை உடனடியாக மாகாண சுகாதார திணைக்களத்திற்கு மாற்றம் செய்யுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளரின் கட்டளைக்கு கீழ்படியாமல், தெடர்ந்தும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் அலுவலகத்திலிருந்து வைத்தியர்கள உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்திற்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையில், வைத்தியர் ராமணாதன் அர்ச்சுனா, மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாறி செல்லும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.