பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகள் இரத்து 

2024ம் ஆண்டிற்கான பாடசாலை ரக்பி லீக் தொடரின், இந்த வாரத்திற்கான அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை ரக்பி கால்பந்து நடுவர்கள்(SLSRFR) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ரக்பி போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளமையினால், பாடசாலைகளுக்கிடையிலான அனைத்து ரக்பி போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய எதிர்வரும் 15ம் திகதி வரை போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு இலங்கை ரக்பி கால்பந்து நடுவர்கள்(SLSRFR) தீர்மானித்துள்ளனர். 

கல்கிசையில் கடந்த மாதம் 30ம் திகதி கல்கிசை, புனித தோமஸ் கல்லூரி மற்றும் கல்கிசை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற ரக்பி போட்டி நிறைவடைந்ததன் பின்னர், நடுவர்களின் தீர்ப்பினால் அதிருப்தியடைந்த அறிவியல் கல்லூரியின் ஆதரவாளர்களினால் நடுவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

நடுவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கல்கிசை பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பாடசாலைகளின் ரக்பி கால்பந்து சம்மேளனம் சுயாதீன விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.

இலங்கை ரக்பி கால்பந்து நடுவர்களிடம், இலங்கை பாடசாலைகளின் ரக்பி கால்பந்து சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், நடுவர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 

Social Share

Leave a Reply