இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போது மைதானத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு அறைக்குள் நுழையும் நோக்கில் இரு தமிழ் ஊடகவியாளர்கள் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டிற்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எம். அப்துல் ரஹ்மான் மற்றும் எம். திருவேரகன் எனும் இரு ஊடகவியலாளர் UTV தொலைக்காட்சியின் பெயரையும் அதன் முன்னாள் தலைமை அதிகாரியான தனது கையொப்பத்தையும் பயன்படுத்தியுள்ளதாக ஏ. எல் இர்பான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏ.எல் இர்பானிடம் வீ மீடியா வினாவியபோது, UTV தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து தாம் விலகி 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தன்னுடைய கையொப்பத்தை பயன்படுத்தி ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டிற்கு போலியான கடிதத்தை அனுப்பியுள்ளதாக ஏ. எல் இர்பான் உறுதிப்படுத்தினார்.
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டிற்கு இன்று(19.07) முறைப்பாடு செய்ததாகவும் ஏ.எல் இர்பான் தெரிவித்தார். இதற்கான எழுத்துமூல ஆவணங்களை விரைவில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டிற்கு தொலைப்பேசியினுடாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஊடக முகாமையாளர் எமக்கு உறுதிப்படுத்தினார். இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.