சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சைகளை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் இன்று மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்ததாக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 7 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களினால் இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் பிள்ளை ஒன்றை பிரசவித்த பெண் ஒருவர், இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை நடாத்திவரும் நிலையில், நேற்று(02.08) இரவு 9.00 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் அர்ச்சுனா அனுமதியின்றி உள் நுழைந்து கடமையிலிருந்த வைத்தியர் அடங்கலாக பணியாளர்களை அச்சுறுத்தியதாகவும், பெண்கள் விடுதிக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதாவும் அது தொடர்பில் மன்னார் பொலிஸில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வி மீடியாவுக்கு மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் அஸாத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட நீதவானிடம் இன்று பிற்பகல் 2.10 முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 07 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.