இணைய விசா சேவை – நீதிமன்றத்தின் தீர்ப்பால் தடுக்கப்பட்ட மோசடிகள்

இணைய விசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளதால் நாட்டில் ஏற்படவிருந்த பாரிய நிதி மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுக்க முடிந்துள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

“தேசிய பாதுகாப்பையும் நாட்டின் சுயாதீனத்தையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்திய இந்த முடிவு, நாட்டின் குடிமக்களின் தரவை வணிக நிறுவனங்களுக்கு தவறாகப் பயன்படுத்த அனுமதித்து, அவர்களின் உயிரைப் பணயம் வைக்க இடமளித்துள்ளது. இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டுக்கு 400 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்படும். இந்த மோசடி மூலம், அரசாங்கம் பாதுகாக்க வேண்டிய குடிமக்களின் இறையாண்மையை அப்பட்டமாக காட்டிக் கொடுத்துள்ளது. அரச வருமானம் போலவே நாட்டின் சுற்றுலாத் துறையும் கடுமையான ஆபத்தில் இருந்திருக்கும்.

நாட்டின் எதிர்கால அரசியலின் மிகவும் தீர்மானமிக்க கடைசி நேரத்திலும் கூட, தமது நட்புவட்டார நண்பர்களுக்கு நாட்டின் சொத்துக்களை உறிஞ்சுவதற்கு இடம் கொடுக்கும் அளவுக்கு நடந்து கொள்வதானது இந்த அரசாங்கத்தின் வெட்கக்கேடையே நன்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்த பாரிய அளவிலான மோசடியைத் தடுக்க, உயர் நீதிமன்றத்தை நாடி, இந்த சட்ட ரீதியான வெற்றியைப் பெற நடவடிக்கை எடுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, பாடலி சம்பிக்க ரணவக்க, எம்.சுமந்திரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நாமனைவரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களுக்கான நீதியைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்த கனம் உயர் நீதிமன்றத்திற்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வோம்.

இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து, இந்த வீசா மோசடியை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள மக்கள் சார் வெற்றியைப் பாதுகாத்து, நாட்டில் விசா வழங்கும் நடைமுறையை சகல தராதரங்களுக்கும் அமைவாக வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply