ஜனாதிபதி தேர்தல்: வட, கிழக்கின் சில கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு 

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் போன்றே முழு நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்ற வகையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அவரின் வெற்றியை உறுதி செய்வதற்காக அர்ப்பணிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(03.08) யாழிலுள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இதன்போது இடம்பெற்ற சந்திப்பிலேயே டக்லஸ் தேவானந்த இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம், முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பில் இன்று(03.08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

நாடு ஆபத்திலிருந்த வேளையில், நாட்டு மக்களைப் பாதுகாக்க துணிச்சலோடு முன்வந்த ஜனாதிபதிக்கு நாட்டின் முன்பிருக்கும் சவால்களை வெற்றி கொள்ள முடியுமென நம்பிக்கை வௌியிட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

முழு நாடும் பற்றி எரிந்த வேலையில் நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. சிலர் இருளில் இருந்தனர். சிலர் மறைந்து கொண்டார். ஆனால் இரு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்ததென தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இன்று நாட்டை புதிய பொருளாதார முறைமையின் கீழ் வழிநடத்திச் செல்கிறார் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனுக்கு இடையிலான சந்திப்பொன்று அவரது இல்லத்தில் நேற்று(02.08) இடம்பெற்றது.

அதன்போது பிரதேசத்தில் சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தோடு, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தனர்.

Social Share

Leave a Reply