ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இன்று(09.08) காலை இராஜினாமா செய்வதாக அறிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
ஊழலற்ற நாட்டை வழிநடத்துவதே தனது விருப்பம் என இன்று(09.08) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் மிக்க அரசியல்வாதிகளால் நிறைந்துள்ள பாராளுமன்றத்தால் இந்த நாட்டை ஒருபோதும் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல இயலாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியை அபிவிருத்தி செய்வதற்கு அயராது உழைத்த போதிலும் தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்தி மீதும், கட்சித் தலைவர் மீதான மரியாதையை இழந்து விட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தீவிரவாதம் எவ்வாறு ஒழிக்கப்பட்டதோ அதை போன்று நாடும் ஊழலில் இருந்து விடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்படும் என தாம் கூறிய போது, முக்கிய இராணுவ அதிகாரிகள் உட்பட யாரும் நம்பிக்கை கொள்ளவில்லை என்ற போதும் வாக்குறுதியை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனது தலைமையின் கீழ் ஊழலற்ற நாட்டை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.