இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 05 ஆம் திகதி ஹெபர்ஹாவில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இரண்டாம் இன்னிங்சில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திய இலங்கை அணி நேற்று(07.12) சரியான முறையில் அதனை தொடரவில்லை. இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணியிலும் பார்க்க 30 ஓட்டங்கள் குறைவாக முதல் இன்னின்னிஸை நிறைவு செய்தது. மீண்டும் துடுப்பாடும் தென்னாபிரிக்கா அணி நல்ல ஆரம்பத்தை பெற்று பலமான நிலையில் முன்னேறி வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய தென்னாபிரிக்கா அணி மத்திய வரிசையில் சிறப்பாக துடுப்பாடி பலமான நிலையை அடைந்தது. அத்தோடு பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் ரையான் ரிக்கெல்டன், ரெம்பா பவுமா ஆகியோர் இணைந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்த இணைப்பாட்டம் மூலமாக தென்னாபிரிக்கா அணி மீள் வருகையினை மேற்கொண்டது. ரையான் ரிக்கெல்டன் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரெம்பா பவுமா 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கைல் வெரைனா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னின்னிங்சில் 338 ஓட்டங்களை பெற்றது. டினேஷ் சந்திமால், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பத்தும் நிஸ்ஸங்க 89 ஓட்டங்களை பெற்றார். டினேஷ் சந்திமால் 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அஞ்சலோ மத்தியூஸ் 44 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 48 ஓட்டங்களையும் பெற்றனர். டிமுத் கருணாரட்ன 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூர்யா 24 ஓட்டங்கள். தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் டேன் பட்டர்சன் 5 விக்கெட்களையும், மார்கோ ஜன்சன், கேஷவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
தென்னாபிரிக்கா அணி இரண்டாம் இன்னிங்சில் 3 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது. இதில் எய்டன் மார்க்ராம் 55 ஓட்டங்களையும், ரெம்பா பவுமா ஆட்டமிழக்கமால் 48 ஓட்டங்களையும், ரிஸ்டன் ஸ்ட்ரப்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.