உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

அண்மையில் பிரதமர் ஹன்சார்ட் பதிவிட்ட ஆவணம் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினையொன்று மேலெழுந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சபா பீடத்தில் சமகாலப் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களை இழந்ததன் காரணமாக, பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கும் நடவடிக்கைகள் நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11.01) இவ்வாறு இந்த பிரச்சினையை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, 9,96,992 விவசாயிகள் உர மானியத்திற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இவர்களுக்கு உர மானியமாக 15000 ரூபா 10000 ரூபா என 2 கட்டமாக மொத்தம் 25000 ரூபா வழங்கப்படவுள்ளன.

இதுவரை 684,194 விவசாயிகள் 15000 மானியத்தைப் பெற்றுள்ளனர். அதாவது 69‌ வீதமானோருக்கு கிடைத்துள்ளன. 31% அதாவது 312,798 பேருக்கு இது இன்னும் கிடைக்கவில்லை. 15000 ரூபா மானியத்திற்கு உரித்துடைய ஏனைய 312,798 விவசாயிகளுக்கு எப்போது இந்த மானியம் வழங்கப்படும்?

மானியம் வழங்கப்படும் திகதியை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது எனது பொறுப்பாகும்.

314,956 விவசாயிகளுக்கு அதாவது 32 வீதமானோருக்கு மட்டுமே 10000 ரூபா மானியம் கிடைத்துள்ளது. 682,041 விவசாயிகளுக்கு அதாவது 68 வீதமானோருக்கு இன்னும் கிடைக்கவில்லை. 10,000 ரூபா மானியத்தை எஞ்சிய 682,041 பருக்கும் வழங்கும் திகதியை அறிய விரும்புகிறேன்.

இந்த 25000 ரூபா மானியத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு 24.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 9.9 பில்லியன் ரூபா அதாவது 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே முழுத் தொகையையும் உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது கோரிக்கை விடுத்தார்.

Social Share

Leave a Reply