எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் இன்று (11.01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை மேலும் நீட்டிக்கப்படாது.
அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் நேற்று (10.01) நள்ளிரவுடன் முடிவடைந்தது.
அதன்படி, நேற்று நள்ளிரவு நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெற்றிக் தொன்களை கடந்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 66,000 தொன் பச்சை அரிசி மற்றும் 101,000 தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்கும்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெற்றிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கத் துறை தெரிவித்துள்ளது” என்றார்.