‘பொது ஆவணத்தை சர்வதேச பேசுப் பொருளாக மாற்ற வேண்டும்’

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணத்தின் இறுதி வரைபு தொடர்பான கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிப்பதை போன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி தலைவர்களுக்கு கையளிக்கப்படுமென, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்தியாவை வலியுறுத்தும் நோக்கில் இலங்கையிலுள்ள தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த ஆவணத்தின் இறுதி வடிவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதுபற்றி மனோ எம்.பி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘இறுதி ஆவணம் தொடர்பான கடிதம் பாரத பிரதமர் நரேந்திர மோடியை விழித்து எழுதப்பட்டாலும் கூட, அதே கடிதத்தை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அத்துடன் சர்வதேச நாட்டு தலைவர்களுக்கும் அனுப்ப வேண்டும். இதனை சர்வதேச பேசுப்பொருளாக மாற்ற வேண்டும்.

இலங்கை மீனவர்களுக்கு இலங்கை கடலை தந்துவிட்டு இந்திய மீனவர்கள் வாபஸ் பெற வேண்டும் என்பது அடிப்படை கொள்கை. அதனை பின்வாங்க முடியாது. ஒரு தமிழரை, எங்கள் நண்பரை இலங்கையில் மீன்வளத்துறை அமைச்சராக நியமித்ததே, ஒருவேளை இப்படி இலங்கையும் இந்தியாவும் முட்டிக்கொண்டு சாக வேண்டுமோ என்ற நோக்கமோ தெரியவில்லை. அதனையும் முறியடித்து டக்ளஸ் தேவானந்தா இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த மோதல் சச்சரவானது, நாங்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கிற ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக வைத்து, இந்தியாவிடம் இலங்கை நாட்டிலிருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்றும் அதற்கு காரணகர்த்தா நீங்கள் தான் என்றும் வலியுறுத்தும் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என எதிர்பார்க்கின்றேன்.

அதுதொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விசேட அவதானம் எடுக்க வேண்டும். ஏனென்றால் அவரும் ஆரம்பத்திலிருந்தே 13 என்ற விடயத்தில் ஆர்வமாக இருக்கின்றார்’ என மனோ எம்.பி தெரிவித்தார்.

'பொது ஆவணத்தை சர்வதேச பேசுப் பொருளாக மாற்ற வேண்டும்'

Social Share

Leave a Reply